ஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி

தினமலர்  தினமலர்
ஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி

அபுதாபி: 3 நாடுகள் சுற்று பயணத்தின் இரண்டாவது கட்டமாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்டார். பிரான்சில் சுற்றுப் பயணம் முடித்து கொண்ட அவர், பாரீசில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார். அங்கு அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன், இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது, யுஏஇயின் உயரிய விருதான ''ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட உள்ளது.
யுஏஇ பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவு:அபுதாபியை வந்தடைந்தேன். பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயீத்துடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இந்தியா மற்றும் யுஏஇ இடையிலான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவேன்.இந்த பயணத்தின் போது, இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதும் முக்கிய திட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
யுஏஇ பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி பஹ்ரைன் சென்று, அந்நாட்டு அரசர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபாவை சந்தித்து பேச உள்ளார். பின்னர், மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி ஜி7 மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

மூலக்கதை