கொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

கொழும்பு: இலங்கை - நியூசிலாந்து அணிகளிடையே நடந்து வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. பி.சரவணமுத்து மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கனமழை காரணமாக முதல் நாளில் 36.3 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. திரிமன்னே 2, குசால் மெண்டிஸ் 32 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் கருணரத்னே 49 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் (0) இருவரும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். மேத்யூஸ் 2 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த குசால் பெரேரா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பொறுப்புடன் விளையாடிய கருணரத்னே 65 ரன் (165 பந்து, 6 பவுண்டரி) எடுத்து சவுத்தீ வேகத்தில் வாட்லிங் வசம் பிடிபட்டார். டிக்வெல்லா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இலங்கை அணி 66 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 32 ரன், தில்ருவன் பெரேரா 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், சவுத்தீ தலா 2, கிராண்ட்ஹோம், சாமர்வில்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை