பாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாலத்தில் கயிறு கட்டி சடலம் இறக்கிய விவகாரம்... சுடுகாட்டிற்கு 50 சென்ட் இடம் ஒதுக்கீடு

நாட்றம்பள்ளி: வாணியம்பாடி அருகே சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் பாலத்தில் கயிறு கட்டி சடலத்தை இறக்கிய சம்பவத்தையடுத்து 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஆனால், இப்பகுதியில் இரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான சுடுகாடு வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவரின் சடலங்களை அருகில் உள்ள ஆந்திர மாநில எல்லையில் புதைத்தும், பாலாற்றின் கிளை ஆற்றில் எரித்தும் வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் இறந்தார். அவரது சடலத்தை பாலாற்றின் கிளை ஆற்றில் எரிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

ஆனால் ஆற்று பகுதிக்கு செல்ல அருகில் உள்ள நில உரிமையாளர் வழிவிடாமல் முள்வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனால் அங்குள்ள பாலத்தின் மீது இருந்து சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கி கிளை ஆற்றின் கரையில் எரித்தனர்.

இதுகுறித்த செய்தி கடந்த 20ம்தேதி ‘தமிழ்முரசு’ மாலை நாளிதழில் படத்துடன் விரிவாக வெளியானது.

இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் நேற்று வாணியம்பாடி தாசில்தார் முருகன், அதிகாரிகளுடன் நாராயணபுரம் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர், சுடுகாட்டுக்கு தேவையான அரசு நிலத்தை ஜவ்வாதுசமுத்திரம் அருகே பனந்தோப்பு பகுதியில் அளவீடு செய்து 50 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்தார்.

மேலும், இந்த இடம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்த பின்னர் மற்ற நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.

ஐகோர்ட் நோட்டீஸ்

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, வேலூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குப்பனின் உடலை அடக்கம் செய்த விவகாரம் தொடர்பான பத்திரிகை செய்தியைக் காட்டி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக்கொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 26ல் வேலூர் மாவட்ட கலெக்டர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை