வரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.8.58 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ. 8. 58 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் கலியுக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.

இக்கோயிலுக்கு சாதாரண நாட்களில் தினமும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், பிரம்மோற்சவம் போன்ற முக்கிய உற்சவ நாட்களில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் தங்கமாகவும், பணமாகவும், வெள்ளியாகவும், நாணயங்களாகவும் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு உண்டியல் காணிக்கை சராசரியாக ஒருநாளைக்கு ரூ. 2 கோடிக்கு மேல் கிடைக்கிறது.

வார விடுமுறை, முக்கிய உற்சவ நாட்களில் ரூ. 3 கோடிக்கு மேல் கிடைக்கிறது. கடந்தாண்டு ஒரே நாளில் ரூ. 6 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.

இதுவே ஏழுமலையான் கோயில் வரலாற்றில் கிடைத்த உண்டியல் காணிக்கையில் அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை ஏழுமலையானை 49 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ. 8. 58 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதுவரை ஏழுமலையான் கோயில் வரலாற்றில் கிடைத்த அதிகபட்சமான உண்டியல் காணிக்கை இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை