இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல்

சென்னை: இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகளும், பாகிஸ்தானில் இருந்து ஒரு தீவிரவாதியும் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக நேற்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டனர்.

முடிவில் தீவிரவாதிகள் குறிப்பாக கோவையில்தான் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது.

இதையடுத்து கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி நேற்று மாலை அவசரமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூடுதல் டிஜிபி, கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், செல்வக்குமார் மற்றும் 14 உதவி கமிஷனர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை நகரில் நுழையும் 12 செக்போஸ்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். அவர்கள் நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

விடிய விடிய இந்த சோதனை நடந்தது. விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய வணிக வளாகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பிரபல ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபோல் கோவை மேற்கு மண்டல ஐ. ஜி.

பெரியய்யா உத்தரவின்பேரில், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல மாநில எல்லைப்பகுதியான பர்கூர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர் மாவட்ட எல்லைப்பகுதிகளான கருங்கல்பாளையம், நொய்யல், கொடுமுடி, சின்னப்பள்ளம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம்

திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி வரும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்கள், எங்கிருந்து எங்கு செல்கின்றனர் என்ற விவரம் சேகரிப்பதோடு, வாகனங்களில் உள்ள பொருட்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

நீலகிரி

சர்வதேச சுற்றுலா மாவட்டமான நீலகிரியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 அதிவிரைவு படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள 16 சோதனைசாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கேரள மாநில எல்லைகளில் உள்ள சோதனைசாவடி, கெத்தை, குஞ்சப்பனை மற்றும் பர்லியார் சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ரயில் நிலையங்கள், படகு இல்லம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைப்போல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நாகை, புதுகை

நாகை, புதுகை கடல் பகுதி இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ளதால் இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கும்படி மத்திய மண்டல ஐஜி வரதராஜு எஸ். பிக்களுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் கடலோரங்களிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல அனைத்து ரயில்நிலையங்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் திரிகிறார்களா என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனைத்து சோதனை சாவடிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுபோல விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் யார், யார், எதற்காக வந்துள்ளனர் என்றும் சோதனை நடத்தப்பட்டது.

.

மூலக்கதை