பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்

தினகரன்  தினகரன்
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்..: கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால், வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாபர் மசூதி வழக்கை, கீழமை நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வருகிறார். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இந்த வழக்கு விசாரணையின் போது சிறப்பு நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் கூடுதல் பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மிகவும் முக்கியமான வழக்கை விசாரிப்பதால் கீழமை நீதிபதிக்கு பாதுகாப்பு அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து உத்திரப்பிரதேச அரசு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, வரும் செப்டம்பர் 30ம் தேதி எஸ்.கே.யாதவின் பதவிக்காலம் முடியவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை