காஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை

தினமலர்  தினமலர்
காஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை

சான்ட்டிலி: பிரான்ஸ் வந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மேக்ரோனை சந்தித்து காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கியுள்ளார். நேற்று ஐரோப்பிய நாடான பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் வரவேற்றார். பின் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.


மேக்ரோன் கூறியதாவது: இந்திய பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடியை முதன் முதலாக சந்திக்கிறேன். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். ஜி7 உச்சி மாநாடு குறித்து நாங்கள் பேசினோம். இந்தியாவும் ஜி7ல் அங்கம் வகிக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதற்காக ஜி7ல் சில மாற்றங்களை செய்துள்ளேன். ஏனெனில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களின் இருப்பும் முக்கியமானது.


இணைந்து செயல்படுவோம்:


பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். பாதுகாப்புத் துறையில் எங்களது பிணைப்பு, நாங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நம்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் எங்களது பங்களிப்பு இருக்கும்.

காஷ்மீர் பிரச்னை:


பிரான்சிடமிருந்து இந்தியாவுக்கு, முதல் ரடேல் போர் விமானம் அடுத்த மாதம்(செப்.,) சென்றடையும். காஷ்மீர் பற்றியும், அங்குள்ள பிரச்னை குறித்தும் மோடி என்னிடம் விளக்கினார். இந்தியா எடுத்த முடிவு அவர்களது அரசுரிமை. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு இதில் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


ரபேலால் மகிழ்ச்சி:


இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான உறவு பேச்சுவார்த்தையுடன் நிற்கவில்லை; முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு தொடர்கிறது. 36 ரபேல் விமானங்களில் முதல் விமானம் இந்தியாவிடம் அடுத்த மாதம் பிரான்ஸ் ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. சிவில் அணுசக்தி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்ட முதல்நாடு பிரான்ஸ்.


ஜி7 உச்சி மாநாட்டில் பங்குபெறுவதில் ஆர்வமாக உள்ளேன். இதற்காக மேக்ரோனுக்கும், பிரான்ஸிற்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பேட்டிக்கு பின் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன், கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மூலக்கதை