நம்மால் முடியும்! நீர்நிலை சீரமைக்க உடனடி அனுமதி

தினமலர்  தினமலர்
நம்மால் முடியும்! நீர்நிலை சீரமைக்க உடனடி அனுமதி

திருப்பூர்:நீர்நிலைகளை துார்வாரி சுத்தம் செய்ய முன்வரும் அமைப்புகளுக்கு உதவிட, மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.மாவட்டத்தில் உள்ள, குளம், குட்டைகளை சீரமைக்கும் பணியில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர், முன்வர வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற வசதியாக, அதிகாரிகளை கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை சார்பில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 134 பணிகள் மாவட்டத்தில் துவங்கி யுள்ளன. குளம், குட்டைகள், வாய்க்கால்கள் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 13 ஒன்றியங்களில் உள்ள, 824 குளம், குட்டைகள் துார்வாரி சுத்தம் செய்யப்பட உள்ளன.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 'டிரீம் 20', வனம் இந்தியா உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டமும், இயக்கமாக நடந்து வருகிறது.
குளம், குட்டைகளை துார்வாரி, இயற்கையை பாதுகாக்கும் வகையில், தனியார் மற்றும் பொதுமக்களின், 100 சதவீத பங்களிப்புடன், குளம், குட்டைகள் துார்வாரும் பணி, திருப்பூர் வடக்கு தாலுகாவில் துவங்கியுள்ளன.நீர்நிலைகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும், மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் முன்வரலாம்; மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
மேலும், அரசுக்கு சொந்தமான, குளம், குட்டைகளை துார்வாரி சுத்தம் செய்யும் பணிக்கு, ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:இயற்கை ஆர்வலர்களின், சேவைப்பணிக்கு ஒத்துழைப்பு நல்க ஏதுவாக, மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி திட்ட அலுவலர் ஸ்ரீனிவாசன் - 74026 07170, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியம்- 74026 07160, பி.டி.ஓ., மகேஸ்வரி - 99943 28137 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நீர் நிலைகளை துார்வாரி சுத்தம் செய்ய முன்வரும் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இந்த அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி, ஊக்குவிக்கும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

மூலக்கதை