பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்? தமிழகத்தில் 'அலர்ட்'

தினமலர்  தினமலர்
பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்? தமிழகத்தில் அலர்ட்

கோவை, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த உளவுத்தகவலை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விநாயகர்சதுர்த்தி விழாவைவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கோவை மாநகரில் ஏறத்தாழ 1000 சிலைகளும் புறநகரில் 5000 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படவுள்ளன. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களைப் போன்று தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் இதற்காக இலங்கை பாகிஸ்தான் வங்கதேசத்திலிருந்து நான்கு பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு உஷார் படுத்தியிருக்கிறது. குறிப்பாக கோவை நகர் முக்கிய இலக்காக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு முதல் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஷாப்பிங் மால், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ரகீம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. வாகன சோதனையின்போது அவரையும் தேடி வருகிறோம்' என்றார்.

மூலக்கதை