மத்தியஸ்தம் செய்ய பலர் தயார் 'குண்டு போடும்' பாகிஸ்தான்

தினமலர்  தினமலர்
மத்தியஸ்தம் செய்ய பலர் தயார் குண்டு போடும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், 'காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய பல நாடுகள் தயாராக உள்ளன; இந்தியா ஏற்றுக் கொண்டால் மட்டுமே, இதில் முன்னேற்றம் ஏற்படும்' என, அண்டை நாடான பாகிஸ்தான் கூறியுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு, சமீபத்தில் நீக்கப்பட்டது.
இதற்கு, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.'காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடி தன்னை கேட்டுக் கொண்டார்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. 'இது இரு தரப்பு பிரச்னை; இதில், மற்ற நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை' என, மத்திய அரசு தெளிவுபடுத்தியது.இதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கானுடன், டிரம்ப் சமீபத்தில் தொலைபேசியில்பேசினார்.அதைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக, டிரம்ப் மீண்டும் கூறியிருந்தார்.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், முகமது பைசல், நேற்று கூறியதாவது:காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு, பல நாடுகள் தயாராக உள்ளன. ஆனால், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் மட்டுமே, முன்னேற்றம் ஏற்படும்.காஷ்மீரில், தற்போது முழு ஊரடங்கு நிலை காணப்படுகிறது. அங்கு, மனித உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றன.பாகிஸ்தானின் கர்தார்புரில் உள்ள குருத்வாராவுக்கு, இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் குர்தாஸ்புர் மாவட்டத்தில் இருந்து சிறப்பு பாதை ஏற்படுத்துவது, திட்டமிட்டபடி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, பாக்., பிரதமர் இம்ரான் கான், தன், தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தொண்டர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கட்சித் தொண்டர்களை, காஷ்மீர் பிரச்னை குறித்து, சர்வதேச அளவில் பேசும்படி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை