ஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆன்டிகுவாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்கோஹ்லி

ஆன்டிகுவா:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, தனது முதலாவது ஆட்டத்தில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து ஆடுகிறது. மேற்கிந்திய தீவுகளில் பயணம் செய்துள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள  விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆக. 30ம் தேதி முதல் செப். 3ம் தேதி வரை ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்தப் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளாக கணக்கிடப்படுகின்றன. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகளும், 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 120 புள்ளிகளும் வெற்றி பெறும் அணிக்கு கிடைக்கும்.

டிரா செய்தால் இரு அணிகளுக்கும் தலா 30 புள்ளிகள் கிடைக்கும். நடப்பு பயணத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதே உற்சாகத்துடன் களமிறங்க உள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம். தவிர கடந்த 10 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளன. அவற்றில் 9 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

எனினும் சொந்த மண்ணில் இந்திய அணி, இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.

அடுத்து அதே இங்கிலாந்து அணியை, மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி, அதிர்ச்சியளித்தது. இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்னதாக நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதை நினைவுபடுத்தினார்.

‘‘அது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி இல்லை. நாங்கள் தட்டுத் தடுமாறி அந்த தொடரில் வெற்றி பெறவில்லை.

பார்படாசில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 381 ரன்கள் வித்தியாசத்திலும், ஆன்டிகுவாவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு, மிகுந்த நம்பிக்கையுடன் அப்போது இங்கிலாந்து அணி இங்கு வந்தது.

நாங்களும் நம்பிக்கையுடன் இங்கிலாந்தை எதிர்கொண்டோம். அதே நம்பிக்கையுடன்தான் இப்போதும் ஆடவுள்ளோம்.



கடந்த 2, 3 ஆண்டுகளாகவே எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நம்பிக்கை தரும் விதமாக ஆடுகின்றனர். குறிப்பாக கீமர் ரோச் மற்றும் ஷன்னான் கேப்ரியல் ஆகியோர் அற்புதமாக பந்து வீசி, எதிரணியின் முன்னணி பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி தருகின்றனர்.

இந்த தொடரிலும் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில்், ‘‘டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது தற்போது கடும் சவாலானதுதான்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடி வரும் 9 டெஸ்ட் அணிகளுக்கும் இது முக்கியமான தருணம். கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது டெஸ்ட் போட்டிகளை பற்றி ஆவலுடன் பேசி வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.    இந்த தொடரை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தோம் என்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னர் ஆஸ்திரேலியாவை, அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளோம்.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பேட்ஸ்மென்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும்.

மற்றதை பவுலர்கள் பார்த்துக் கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை