காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு பிரான்ஸ், வங்கதேசம் ஆதரவு..!

தினகரன்  தினகரன்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு பிரான்ஸ், வங்கதேசம் ஆதரவு..!

பாரிஸ்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு பிரான்ஸ், வங்கதேசம் ஆதரவு அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்கதேசம் ஆதரவுகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் சர்வதேச பிரச்னையாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகள் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என கருத்து தெரிவித்துள்ளன. ஐ.நா., பாதுகாப்பு சபையிலும், சீனா ஆதரவுடன் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. இதனிடையே காஷ்மீர் விவகாரம் குறித்து, பிரான்ஸ் அமைச்சர் ஜான் வெஸ் லெ டிரியன் உடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தொலைபேசி மூலம் பேசினார். இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது; பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் நடந்த ஆலோசனையின் போது, காஷ்மீர் விவகாரத்தில் பிரான்சின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், இரு நாடுகள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள், பதற்றத்தை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரசல் போக்கை அதிகரிக்கும் வகையில், எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என வங்கதேசம் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது; \'இந்திய அரசு 370-வது பிரிவை ரத்து செய்வது அந்நாட்டின் உள்விவகாரம் என்று வங்கதேசம் கருதுகிறது\' என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, அத்துடன் வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் எப்போதும் வங்காளதேசம் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை