ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு..: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு..: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு, வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இன்று 10.30 மணி அளவில் நீதிபதி ரமணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக, தான் முடிவு எடுக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என்றும் ரமணா தெரிவித்து விட்டார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. இதனிடையே முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். நேற்று 2 முறை, இன்று 2 முறை என மொத்தம் 4 முறை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் நீதிபதி ரமணா முன்னிலையில், சிதம்பரம் தரப்பு வக்கீலான கபில் சிபல் ஆஜரானார். தனது கட்சிக்காரரை கைது செய்ய தடை விதித்து இடைக்கால பாதுகாப்பு வழங்க அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வழக்கு, பட்டியலிலேயே இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி ரமணா, தன்னால் எதையும் செய்ய முடியாது என்று மீண்டும் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமைக்கு, அதாவது 23ம் தேதிக்கு ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. எனவே, அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. இதுவரை சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர். தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் முன்ஜாமின் மனு நாளை மறுநாள், விசாரணைக்கு வரும் முன்பாக சிதம்பரத்தை கைது செய்துவிட வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் துரிதம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

மூலக்கதை