ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்...: இந்திய வாலிபர் பலி!

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்...: இந்திய வாலிபர் பலி!

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டம் மெண்டார் செக்டாரில் உள்ள தப்ராஜ் கிராமத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது சிறிய ரக கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசினர். இதில் மொகமது அப்துல் கரீம்(22) என்ற வாலிபர் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் நாயக் ரவி ரஞ்சம் குமார் வீர மரணம் அடைந்தார். மேலும், நான்கு ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாது, பாகிஸ்தானின் தாக்குதலால் சுமார் 6 வீடுகள் நாசமடைந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை