இமாச்சல்பிரதேச வெள்ளத்தில் சிக்கி தப்பிய நடிகை மஞ்சுவாரியர் கேரளா திரும்புகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இமாச்சல்பிரதேச வெள்ளத்தில் சிக்கி தப்பிய நடிகை மஞ்சுவாரியர் கேரளா திரும்புகிறார்

திருவனந்தபுரம்: இமாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்புக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று நாடு திரும்புகிறார். மலையாள திரைப்படத்தின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன்.

இவர் தற்போது ‘கயற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவை சேர்ந்தவர்கள் 30 பேர் இமாச்சல பிரதேசம் சென்றனர்.

மணாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த 12ம் தேதி அங்கிருந்து சுமார் 100 கி. மீ தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகுதான் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.

கனமழை, நிலச்சரிவு காரணமாக சாலைகள் முழுவதும் சேதமடைந்தன. இன்டர்நெட், போன் வசதி உள்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் குறித்து எந்த விபரமும் வெளியுலகத்துக்கு தெரியாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் இரவு நடிகை மஞ்சு வாரியார் சாட்டிலைட் போன் மூலம் கொச்சியில் உள்ள அவரது தம்பி மது வாரியாரை அழைத்து விபரத்தை கூறினார். அதன் பிறகுதான் படிப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அங்கு சிக்கி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மது வாரியர் மத்திய இணை அமைச்சர் முரளிதரனை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.

உடனடியாக இமாச்சல பிரதேச முதல்வர் ஜெயராம் தாக்கூரை அழைத்து வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கியுள்ள நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மணாலியில் இருந்து மீட்புப்படையினர் சத்ரு பகுதிக்கு விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் அனைவருக்கும் உணவு பொருட்களும் ெகாண்டு செல்லப்பட்டன.

பின்னர் அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. இதற்கிடையே சத்ரு சாலைகளும் சீரமைக்கப்பட்டன.

ஆனால் இன்னும் ஒருநாள் படப்பிடிப்பு நடத்த உள்ளதால் அது முடிந்த பின்னர் இன்று திரும்புவதாக இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து மற்ற சுற்றுலா பயணிகள் அனைவரையும் மீட்புப்படையினர் மீட்டு பத்திரமான இடத்துக்கு அழைத்து சென்றனர்.

நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் இன்று அல்லது நாளை கேரளாவுக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது.

.

மூலக்கதை