கோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்

தினமலர்  தினமலர்
கோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்

புதுடில்லி:'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துதான், அங்கு பாபர் மசூதி கட்டினர்' என, புதிய ஆதாரங்களுடன், 'ராம் லல்லா விரஜ்மான்' சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.விசாரணையின், எட்டாவது நாளான நேற்று, ராம் லல்லா விரஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ். வைத்தியநாதன், பல்வேறு ஆதாரங்களுடன் வாதிட்டார்.

அவர் வாதிட்டதாவது:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான், ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இதற்கு, பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, தொல்லியல் துறையின் ஒரு அறிக்கையின்படி, இந்த இடத்தில் ஹிந்துக் கோவில் இருந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. முதலை, ஆமை போன்றவற்றின் உருவங்கள் உள்ள கற்கள் அந்த இடத்தில் இருந்துள்ளது. முதலை, ஆமை போன்றவற்றை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை.இதில் இருந்தே, இங்கு, ஹிந்துக் கோவில் இருந்தது உறுதியாகி உள்ளது.
அங்கு பாபர் மசூதி அளவுக்கு மிகப் பெரிய கோவில் இருந்ததா என்பது தெரியவில்லை; ஆனால், அங்கிருந்த கோவில் சிறியது அல்ல என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்பகுதியில் மீட்கப்பட்ட பல கற்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றில், முஸ்லிம்கள் மத நம்பிக்கையில் இல்லாத, ஹிந்துக்கள் மத நம்பிக்கையில் உள்ள சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பல கல்வெட்டுகள், சமஸ்கிருதத்தில் இருந்தன. இவற்றில் இருந்து, அங்கிருந்த ராமர் கோவிலை இடித்து தான், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.இவ்வாறு, அவர் வாதிட்டார்.

மூலக்கதை