டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி!

தினமலர்  தினமலர்
டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு... தள்ளுபடி!

புதுடில்லி:மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதனால், கைது நடவடிக்கையை தவிர்க்க, உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள, மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டால், அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

காங்கிரசை சேர்ந்த, மன்மோகன் சிங், ௨௦௦௪ - ௨௦௧௪ல் பிரதமராக இருந்த போது, உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர், தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம், ௭௩. இவர், நிதி அமைச்சராக இருந்த போது, இவரது மகன் கார்த்தி, ஏகப்பட்ட, 'கோல்மால்' வேலைகளில் ஈடுபட்டார் என்பது, சி.பி.ஐ., வாதம்.

ரூ.305 கோடி



அவற்றில் ஒன்று, 2007ல் நடந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற, 'டிவி' சேனல் நிறுவனத்தின் முறைகேடு. வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதியை பெற, அந்த நிறுவனத்திற்கு, சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்தார்; அதற்கான கமிஷனை, மகன் கார்த்தி வாங்கினார் என்பது குற்றச்சாட்டு.இந்த வழக்கின் ஊழல் அம்சத்தை, சி.பி.ஐ.,யையும், நிதி முறைகேடு வழக்கை, மத்திய அரசின் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்து வருகின்றன.

இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., அனுமதி கோரியது.கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சிதம்பரமும், அவர் மகன் கார்த்தியும், டில்லி உயர் நீதி மன்றத்தில், முன் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்தனர். 2018 ஜூலை முதல், அவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றத்தில், தடை விதித்து, அவ்வப்போது தடையை நீட்டித்தும் வந்தது.

இந்நிலையில், கைதுக்கான தடையை நீட்டிக்க கோரி, சிதம்பரம் தரப்பில் தாக்கலான மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சுனில் கவுர், தடையை நீட்டிக்க மறுத்து உத்தரவிட்டார். முன் ஜாமின் மனுவும் தள்ளுபடியானது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிதம்பரம், ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார்; வழக்கறிஞராக தொழில் செய்கிறார் என்பதெல்லாம், இந்த வழக்கை பாதிக்காது. வழக்கின் அடிப்படை ஆதாரங்களை பார்க்கும் போது, ஒட்டுமொத்த முறைகேட்டின் காரணகர்த்தாவாக, அவர் திகழ்வது தெரிகிறது. முறைகேட்டின் தீவிரத்தை பார்க்கும் போது, அவரை கைது செய்ய, மேலும் தடை விதிப்பது சரியாக இருக்காது.பொருளாதார குற்றங்கள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இத்தகைய பெரிய முறைகேட்டில், விசாரணை அமைப்புகளின் கைகளை கட்டி வைப்பது சரியாக இருக்காது. எனவே, சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

சம்மன் அனுப்பவில்லை



முன்னதாக, சிதம்பரம் சார்பில் தாக்கலான மனுவில் கூறியிருந்ததாவது:இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்க இயக்குனரகம், ஒரு முறை கூட எனக்கு, 'சம்மன்' அனுப்பவில்லை. சி.பி.ஐ., கைது செய்யும் அபாயம் உள்ளது. ஆனால், அதன் முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில், என் பெயர் இல்லை. நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடப் போவது இல்லை; ஆதாரங்களை அழிக்கப் போவதில்லை; விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன். எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.

சிதம்பரத்திற்கு முன் ஜாமின் நிராகரிக்கப்பட்டதும், அவர் சார்பாக ஆஜரான, மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், ''மூன்று நாட்களுக்காவது அவரை கைது செய்யக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,'' என்றார். அதையும், நீதிபதி நிராகரித்தார்.இதனால், எந்நேரமும் சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதும், காங்., மூத்த தலைவர்களான, பிரபல வழக்கறிஞர்கள், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர், சிதம்பரத்திடம் ஆலோசனை நடத்தினர்.

வலியுறுத்தல்



உடனடியாக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் பதிவாளர், சூர்யபிரதாப் சிங்கை சந்தித்து, கபில்சிபல் வலியுறுத்தினார்.அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என, சிதம்பரம் தரப்பில், இன்று காலை, ௧௦:௩௦ மணிக்கு, மூத்த நீதிபதி முன் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிதம்பரத்திற்கு எதிராக அமைந்தால், உடனடியாக, அவர் கைதாக வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை