நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'

தினமலர்  தினமலர்
நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்  2

பெங்களூரு:'சந்திரயான் - 2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நேற்று வெற்றி கரமாக செலுத்தப்பட்டது.



ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜூலை 22ல் புறப்பட்டது சந்திரயான் - 2 விண்கலம். நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனாவை அடுத்து ஐந்தாவது நாடாக இந்த முயற்சியில் இந்தியா இரண்டாவது முறையாக இறங்கியது.இந்த முறை எந்த நாடுகளின் விண்கலங்களும் சென்றடையாத நிலவின் தென் பகுதியில் சந்திரயான் - 2 விண்கலத்தை இறக்கி ஆய்வுகள் மேற்கொள்வதாக திட்டம்.

‘சந்திரயான்–2’ குறித்து விளக்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.



குறிப்பாக நிலவில் மனிதர்கள் வசிக்க தேவையான சூழல் உள்ளதா; தண்ணீர் உள்ளதா; அங்குள்ள ரசாயன இருப்புகளை பூமியின் தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமா என ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர்.இதற்காக சந்திரயான் - 2 விண்கலத்தில் மூன்று முக்கிய கருவிகள் உள்ளன. 'லேண்டர் ரோவர் ஆர்பிட்டர்' என்ற அந்த மூன்று கருவிகளும்தான் நிலவில் இறங்குவது ஆராய்ச்சிகள் மேற்கொள்வது சுற்றி வருவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளன.

இந்த அரிய சாதனைக்காக நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் ஆக.14ல் பூமியிலிருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணித்தது. பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்தவாறு அந்த விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.

திட்டமிட்டபடி காலை9:02 மணிக்கு சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்த திரவ இன்ஜினை
இங்கிருந்தவாறு விஞ்ஞானிகள் பற்ற வைத்தனர். 30 நிமிடங்கள் அந்த விண்கலத்தின்
இன்ஜின்கள் இயக்கப்பட்டன. மிகவும் சிக்கலான இந்தப் பணியை திறமையாக நம்
விஞ்ஞானிகள் கையாண்டனர். அதையடுத்து அந்த விண்கலத்திற்கு வேகம் கிடைத்தது;
நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.

அந்தப் பணியும் கச்சிதமாக நிறைவேறியது.இன்னும் நான்கு முறை அதன் சுற்று வட்ட உயரம் அதிகரிக்கப்படும். செப்.2ல் லேண்டர் கருவி ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து பயணம் மேற்கொள்ளும். செப். 7 ல் சந்திரயான் - 2 நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதயம் நின்று விட்டது!

பெங்களூருவில் நிருபர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:
சந்திரயான் - 2 விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்துவதற்கான பணி
30 நிமிடங்கள் நடந்தது. அந்த நேரம் எங்கள் இதயங்கள் நின்று விட்டது போன்ற நிலையில் இருந்தது; பதற்றமாக இருந்தோம். இதற்கு முன் சந்திரயான் - 1 விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தியுள்ளோம். அந்த அனுபவம் கை கொடுத்தது.

ஆனால் செப்டம்பர் ௭ல் நிலவில் சந்திரயான் - 2 தரையிறங்கும் போது எங்களுக்கு நிச்சயம் பதற்றம் அதிகரித்து விடும் என நினைக்கிறேன். எங்களுக்கு அதற்கான அனுபவம் இல்லை. எனினும் ஏராளமான பரிசோதனைகள் உந்துதல் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வெற்றிகரமாக அதையும் நிகழ்த்தி காட்டுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை