காஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...

தினகரன்  தினகரன்
காஷ்மீர் பிரச்னையில் பதற்றம் பேச்சை குறை... பேச்சை குறை...

வாஷிங்டன்: ‘காஷ்மீர் விவகாரத்தில் தேவையற்ற பேச்சை தவிருங்கள்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும்  பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இதை சர்வதேச பிரச்னையாக்க இம்ரான்கான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டன.காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சு 30 நிமிடங்கள் நீடித்தது. பின்னர்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் தொலைபேசியில் டிரம்ப் பேசினார். அதன்பின்  டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய பிரதமர் மோடி,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இரு நண்பர்களிடமும் தொலைபேசியில் பேசினேன். இந்நாடுகள் உடனான வர்த்தகம், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினேன்.  குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வலியுறுத்தினேன். தர்மசங்கடமான நிலையிலும், இரு தரப்புடனான தொலைபேசி பேச்சு சிறப்பாக அமைந்தது,’ என்று கூறியுள்ளார்.  இந்த தொலைபேசி பேச்சு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் டிரம்ப் நேற்று முன்தினம் பேசியபோது, காஷ்மீரில் பதற்றத்தை குறைக்க வேண்டுமானால் தேவையின்றி  பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று இம்ரான்கானிடம் வலியுறுத்தினார்,’ என்று கூறப்பட்டுள்ளது. டிரம்பின் தொலைபேசி பேச்சு பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், ‘`காஷ்மீர் மக்கள் மீது  விதிக்கப்பட்டுள்ள தடையை இந்தியா நீக்க வேண்டும். காஷ்மீர் நிலவரத்தை அறிய சர்வதேச மனித உரிமை குழுக்களை அங்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று டிரம்பிடம் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார்,’’ என்றார்.

மூலக்கதை