ஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை

தினமலர்  தினமலர்
ஜாகிர் நாயக்கிற்கு மலேஷிய மாகாணங்கள் தடை

மலேஷியா, :மலேஷியாவில், ஹிந்துக்களுக்கு எதிராகவும், சீனர்களை கண்டித்தும் பேசிய, இஸ்லாமிய மத போதகர் என்ற போர்வையில், பயங்கரவாத கருத்துகளை வலியுறுத்தி வரும், ஜாகிர் நாயக், ௫௩, 'மலேஷியாவில் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது' என, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிறந்தவர் ஜாகிர் நாயக். மத போதகர் என்ற போர்வையில், ஹிந்துக்களுக்கு எதிராகவும், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும் பேசியதால், அவரை இந்திய போலீசார் கைது செய்ய முயன்றனர்; உடனே, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்.பல நாடுகளில் தலைமறைவாக இருந்த அவருக்கு, முஸ்லிம் நாடான மலேஷியா அடைக்கலம் கொடுத்துள்ளதுஎனினும், 'மத போதனையில் மட்டும் தான் ஈடுபட வேண்டும்; அரசியல் பேசக் கூடாது' என, நிபந்தனை விதித்துள்ளது.

அதையும் மீறி, இம்மாத துவக்கத்தில், கோடா பாரு என்ற இடத்தில் பேசிய நாயக், 'இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் சலுகைகளை விட, ௧௦௦ மடங்கு அதிகமான சலுகைகளை, மலேஷியாவில் வாழும் ஹிந்துக்கள் அனுபவிக்கின்றனர்.'எனினும் இங்கு வாழும் ஹிந்துக்கள், இந்தியா மீதே அதிக பாசம் கொண்டுள்ளனர்' என்றார்.மேலும், 'மலேஷியா, முஸ்லிம்களுக்கே சொந்தம்; சீனர்கள், தங்கள் நாட்டுக்கு ஓட வேண்டும்' என்றும், பேசியிருந்தார்.இதுகுறித்து, மலேஷிய பிரதமர், மஹாதிர் முகமது கூறியதாவது:அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின்படி தான், அவர் இந்த நாட்டில் நிரந்தரமாக தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பேச்சு, அரசியல்ரீதியாகத் தான் உள்ளது. மதரீதியாக பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.

இந்தியர்களையும், சீனர்களையும் அவர்களுக்கு நாட்டுக்கு போகச் சொல்கிறார். நான் கூட அவ்வாறு பேசியிருக்க மாட்டேன்.அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க முடியாது. அதனால், பொதுக்கூட்டங்களில் பேச அவருக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, பிரதமர் கூறினார்.ஜாகிர் நாயக், பொதுக்கூட்டங்களிலும், பொதுமேடைகளிலும் பங்கேற்கக் கூடாது என, மேலும் பல மாகாண நிர்வாகங்கள், தடை விதித்து வருகின்றன.

மூலக்கதை