பெங்களூரு கோயில் திருவிழாவில் தமிழ் பாடல் பாடியதற்கு எதிர்ப்பு : கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பெங்களூரு கோயில் திருவிழாவில் தமிழ் பாடல் பாடியதற்கு எதிர்ப்பு : கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்கண்டேயா நகரில் கோயில் திருவிழாவில் நடந்த இன்னிசை கச்சேரியில் தமிழ் பாடல் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் பிற மொழியினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு ஜெகஜீவன்ராம் நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மார்கண்டேயா நகரில் உள்ள கங்கம்மாதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை இரவு இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழ் பாடல்கள் பாடினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கன்னட அமைப்பினர், நிகழ்ச்சி நடந்து வந்த மேடை மீது ஏறி இசை கருவிகளை அடித்து, உடைத்து  சேதப்படுத்தியதுடன் பாடல் பாடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இன்னிசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் வாழும் சிறுபான்மை வகுப்பினருக்கான உரிமையை பறிக்கும் செயலாக மட்டுமில்லாமல் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவிடம் பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் நிர்வாகிகள் கோ.தாமோதரன், ராமசுப்ரமணியம், சுரேஷ்குமார் மற்றும் கங்கம்மா கோயில் திருவிழா ஏற்பாட்டாளர்கள் நேற்று காலை புகார் மனு கொடுத்தனர்.

மூலக்கதை