பொருளாதார குழப்பம் வருமா? அடுத்தது மீண்டும் வராக்கடன் ஆபத்து : பிரபல சர்வே எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பொருளாதார குழப்பம் வருமா? அடுத்தது மீண்டும் வராக்கடன் ஆபத்து : பிரபல சர்வே எச்சரிக்கை

மும்பை : இந்தியாவில் இப்போதுள்ள பொருளாதார குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வங்கிகளில் வராக்கடன் பூதம் தலைதூக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூல் குறைகிறது: உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் ஐந்தாண்டுக்கு இல்லாத வகையில் 5.8 சதவீதமாக குறைந்து விட்டது; ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை முடக்கி, மூடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இவ்வளவு சிக்கல்கள் இடையே இப்போது வங்கிகளும் தள்ளாடும் நிலை ஏற்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.  அமெரிக்காவில் ஆரம்பித்து பல நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள  ‘மூடீஸ்’ ஆய்வு அமைப்பு, பல நாடுகளில் உள்ள பொருளாதார நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்த ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல துறைகளில் உற்பத்தி குறைந்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு பின்னர் இந்த நிலை இன்னும் மோசமடையும் சூழல் இப்போதே உருவாகி கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகும். பல துறைகளில் ஆட்குறைப்பு என்பது, உற்பத்தி, வங்கி நிதி உட்பட எல்லாவற்றையும் பாதிக்க செய்யும். கடைசியில் இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கும். இப்போது  ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, விரைவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்த  ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் போது, அடுத்து வங்கி சாராத  நிதி நிறுவனங்கள் எல்லாம் வங்கிகளிடம் வாங்கி கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படும். அவர்கள் கடனை கட்டாமல் மீண்டும் வங்கிகளில் வராக்கடன் பூகம்பம் உருவாகும். ஏற்கனவே சில வங்கிகள் வராக்கடனில் சிக்கி தவித்து அரசு உதவியால் மீண்டு வருமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளன. மேலும் சில வங்கிகள் இந்த வராக்கடன் குழியில் வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வராக்கடன் பிரச்னையால் வங்கிகள் சில கடுமையாக பாதிக்கப்படும். இதனால் வங்கிகளின் நிதி நிலை சரிந்து பொருளாதார நிலையை மேலும் பலவீனமாக்கி விடும். வங்கிகள் வராக்கடனில் இருந்து மீளும் நிலையில், மீண்டும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு, புதிய வராக்கடன் குவியும் போது வங்கிகளுக்கு பெரும் இடியாக இருக்கும். வராக்கடன் சதவீதம் 12 ல் இருந்து 10க்கு கீழ் கொண்டு போகும் நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டிருக்கும் போது, மீண்டும் அதே பிரச்னை புதிதாக கிளம்பும் என்பதை இப்போதே அறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஜிடிபி கதி என்ன?* இந்தாண்டு மார்ச் மாதம் வராக்கடன் சதவீதம் 9.3 ஆக உள்ளது. இது அடுத்தாண்டு மார்ச் மாத இறுதியில் 9 சதவீதமாக குறையு–்ம் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. * இதுபோல, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இப்போது 6.8 சதவீதமாக உள்ளது. இது அடுத்தாண்டு மார்ச் இறுதியில் 7 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறது. * ஆனால், இப்போதுள்ள பொருளாதார குழப்ப சூழ்நிலையில் இந்த இலக்கை எட்டுமா என்பதே பெரும் கேள்வி–்க்குறி  என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை