விடுவித்த எண்ணெய் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க கோரிய அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
விடுவித்த எண்ணெய் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க கோரிய அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஜிப்ரால்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை மீண்டும் சிறைபிடிக்கக் கோரிய அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ் 1’, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் தீவு வழியாக கடந்த ஜூலை 4ம் தேதி சென்றது. அப்போது, ஜிப்ரால்டர் போலீசார் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தனர். ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள சிரியாவுக்கு இக்கப்பல் எண்ணெய் கொண்டு செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை ஈரான் மறுத்தது. இந்த விஷயத்தில் ஈரானுக்கு உதவ முடியாது என இங்கிலாந்து கைவிரித்ததால், வளைகுடா கடல் பகுதியில் அந்நாட்டு கப்பலை ஈரான் சிறை பிடித்தது. 40 நாட்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலை விடுவிக்க ஜிப்ரால்டர் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கப்பலை விடுவிக்கும் கடைசி நேரத்தில், ஈரான் கப்பலை மீண்டும் சிறைபிடிக்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியபின்  இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் தடைகள் ஐரோப்பிய யூனியனில் செல்லுபடியாகாது என ஜிப்ரால்டர் மறுத்துவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் அந்த கப்பல் ஜிப்ரால்டரில் இருந்து புறப்பட்டு சென்றது. இக்கப்பலை சிரியாவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்பார் மவுசாவி அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா மீண்டும் இதுபோன்ற தவறுகளை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அமெரிக்கா எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை