மூன்றாவது டெஸ்டில் ஸ்மித் சந்தேகம்: ‘பவுன்சர்’ தந்த பாதிப்பு | ஆகஸ்ட் 18, 2019

தினமலர்  தினமலர்
மூன்றாவது டெஸ்டில் ஸ்மித் சந்தேகம்: ‘பவுன்சர்’ தந்த பாதிப்பு | ஆகஸ்ட் 18, 2019

லண்டன்: ஆர்ச்சர் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், 30. எண்ணற்ற சாதனையை வசப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சக வீரரான வார்னருடன் இணைந்து ஒரு ஆண்டு தடை பெற்றார். இதிலிருந்து மீண்டு வந்த ஸ்மித், இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் பங்கேற்றார். அப்போது, ‘ஸ்மித் ஒரு ஏமாற்றுக்காரர்’ என இங்கிலாந்து ரசிகர்கள் ஏளனம் செய்தனர். இதை கண்டுகொள்ளாத இவர், 10 போட்டியில் 379 ரன் குவித்து பதிலடி தந்தார்.

இரண்டு சதம்

தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். லார்ட்சில் நடந்த இரண்டாவது போட்டியிலும் நிலைத்து நிற்க, எதிரணிக்கு ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இவரை அவுட்டாக்க வழி தெரியாமல் விழித்த, வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் ‘பவுன்சராக’ வீசி அச்சுறுத்தினார். முதலில் இடது முழங்கையில் பந்து அடிபட்டபோது, ஸ்மித் மீண்டார்.

போட்டியிலிருந்து விலகல்

கோபம் குறையாத ஆர்ச்சர் 76வது ஓவரின் 2வது பந்தை மீண்டும் ‘பவுன்சராக’ வீச, ஸ்மித்திற்கு வினையாக அமைந்தது. இடது கழுத்துப்பகுதியில் பந்து பட, ஸ்மித் களத்திலேயே சரிந்தார். ‘பவுன்சர்’ தாக்கி மரணமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுசின், நினைவுகள் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் சில நொடி வந்துபோகின. ஸ்மித் எழுந்தபோதும், ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். சில நிமிடத்திற்குப்பின், மீண்டும் பேட்டிங் செய்த இவர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டபோதும், ஸ்மித் இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகினார். மூன்றாவது போட்டியில் (ஆக.22–26, லீட்ஸ்) பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில்,‘‘ கடந்த 2005ல் லார்ட்சில் நடந்த ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் வீசிய ‘பவுன்சர்’, எனது வலது கன்னத்தை தாக்கியது. ரத்தம் கொட்டியபோதும், எதிரணி கேப்டன் மைக்கேல் வான் சக வீரர்களிடம் பேசியதை கேட்க முடிந்தது. நீங்கள் யாரும் பாண்டிங் அருகே செல்ல வேண்டாம். தேவை எனில், நலமா என்று மட்டும் கேளுங்கள் போதும் என்றார். அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீளக்கூடாது என அவர்கள் எண்ணி இருக்கலாம். மற்ற பேட்ஸ்மேன்கள் பயந்து ‘பெவிலியனில்’ அமர்திருப்பர். ஆனால், ஸ்மித் மீண்டும் பேட்டிங் செய்து துணிச்சலான வீரர் என நிரூபித்துவிட்டார்,’’ என்றார்.

அக்தர் கோபம்

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட்டில் ‘பவுன்சர்’ என்பது ஒரு பகுதிதான். ஆனால், நாம் வீசிய பந்து பேட்ஸ்மேனை தாக்கிவிட்டால் உடனடியாக நலம் விசாரிக்க வேண்டும். இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில், ஸ்மித்தின் கழுத்துப்பகுதியில் பந்து தாக்கியபோதும் ஆர்ச்சர் அருகில் சென்று பார்க்கவில்லை. இது தவறான செயல்,’ என தெரிவித்துள்ளார். 

புதிய ‘ஹெல்மெட்’ கட்டாயம்

ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலியாவின் ஹியுஸ் மறைவுக்குப்பின், கழுத்துப்பகுதியை பாதுகாக்கும் வகையில் புதிய ‘ஹெல்மெட்’ உருவாக்கப்பட்டது. இதை அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் அணிய வேண்டும் என வலியுறுத்தாதது எனது தவறுதான். எதிர்காலத்தில் புதிய ‘ஹெல்மெட்’ கண்டிப்பாக அணிய வேண்டும்,’’ என்றார். 

தலைவலி, மயக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சார்பில், லார்ட்ஸ் போட்டிக்கான ‘ரெப்ரி’ ரஞ்சன் மடுகுலேவிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில்‘ எங்கள் அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தலைவலி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. சில அறிகுறிகள் 48 மணி நேரத்திற்குப்பின்பும் தெரியலாம். இவரது உடல்நிலை சிறப்பாக இல்லை. பந்து தாக்கிய பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என அறிய சோதனை செய்யப்படவுள்ளது. இரண்டாவது டெஸ்டில் ஸ்மித்தால் தொடர்ந்து பங்கேற்க முடியாது,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் வீரர் 

போட்டியின்போது வீரர் யாராவது பந்து தாக்கி மயக்க நிலை அடைந்தால், மாற்று வீரரை களமிறக்கலாம். இவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஈடுபடலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில நாட்களுக்கு முன் அனுமதி தந்தது. இதன்படி, ஸ்மித்திற்குப்பதில் லபுசேன் களமிறக்கப்பட்டார். இந்த புதிய விதிமுறையின்படி, மாற்று வீரரை வைத்துக்கொண்ட முதல் சர்வதேச வீரர் ஆனார் ஸ்மித். 

இதயத்துடிப்பு நின்றது

இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் கூறுகையில்,‘‘ பந்து தாக்கியதும் களத்திலேயே ஸ்மித் விழுந்ததால், எங்களின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. இவர், மீண்டும் எழுந்தபி்ன்தான் நிம்மதி அடைந்தோம்,’’ என்றார்.

ஸ்மித்திற்கு தலைவலி

ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,‘‘ நேற்று முன்தினம் இரவு துாங்க சென்றபோது, தலைவலியை உணர்ந்தேன். இருப்பினும், நன்றாக துாங்கினேன். எழுந்தபோது மீண்டும் தலைவலி, மயக்கம் ஏற்பட்டது. இதற்காக, பல சோதனைகள் செய்யப்பட்டன. எதிர்பாராதவிதமாக இரண்டாவது டெஸ்டில் தொடர்ந்து விளையாட முடியவில்லை. மூன்றாவது போட்டியில் பங்கேற்பது குறித்து, மருத்துவக்குழுவினர் முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.....................

மூலக்கதை