அதிபர் தேர்தலுக்கு தயாராகிறது இலங்கை

தினமலர்  தினமலர்
அதிபர் தேர்தலுக்கு தயாராகிறது இலங்கை

கொழும்பு:இலங்கையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின், ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சிகளுக்குள், அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இலங்கையில், டிசம்பர், ௮க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவரும், அதிபருமான சிறிசேன, 97, தலைமையிலான அரசில், பிரதமராக இருப்பவர், ரணில் விக்ரமசிங்கே, 70. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான அவர், 1999 மற்றும் 2005, அதிபர் தேர்தல்களில் தோல்வி அடைந்த போதிலும், மீண்டும் அதிபராக, போட்டியிட விரும்புகிறார்.அதற்காக, தன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, பிற கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த, கடந்த, 5 ம் தேதி கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்தார்; 'ஜனநாயக தேசிய கூட்டணி' என்ற பெயரில், புதிய கூட்டணியை உருவாக்க நினைத்தார்.ஆனால், அந்த கூட்டத்திற்கு பல தலைவர்கள் வரவில்லை. இதனால், இரண்டாவது முறையாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது; இந்த கூட்டத்திலும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எனவே, வரும், 19 ல் மீண்டும் கூடி பேசுவது என, முடிவானது.அந்நாட்டின் மூன்றாவது அதிபராக இருந்த, ரனசிங்கே பிரேமதாசாவின் மகன், சஜித் பிரேமதாசா, 52. இவரை, அதிபர் வேட்பாளராக்க, கூட்டணி கட்சிகள் தயாராக உள்ளன; ஆனால், ரணில் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.ரணில் கட்சியின், துணைத் தலைவராக உள்ள, சஜித் பிரேமதாசா, அது பற்றி கவலைப்படாமல், தனியாக பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார். ரணில் அதிபராக, அந்நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களும், அவர்களுக்கு ஆதரவான புத்த மதத் துறவிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாதவர்; அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடன் கைகோர்த்து செயல்படுபவர்' என்று கூறி, அவரை எதிர்க்கின்றனர்.
கொலை மிரட்டல்
கோதபய புகார்இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் தலைவராக இருப்பவர், முன்னாள் அதிபர், ராஜபக்சே, 73. இவரது தம்பி, கோதபய ராஜபக்சே, 70, அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னை தீர்த்துக் கட்ட, வடக்கு மாகாணத்தில் சிலர், திட்டம் தீட்டி வருவதாக, கோதபய புகார் கூறினார்.ராஜபக்சே அதிபராக இருந்த போது, ராணுவ அமைச்சராக இருந்தவர், கோதபய. இருவரின் செயல் திட்டங்களால் தான், 2009 ல், விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டனர். அமெரிக்க குடியுரிமை பெற்று, நீண்ட காலமாக அங்கு வசித்த கோதபய, சமீபத்தில் இலங்கை வந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்று, அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதிபர் - பிரதமர்இணக்கமில்லை
அதிபர் சிறிசேன, பிரதமர் ரணிலுக்கு இடையே இணக்கமான போக்கு இல்லை. இதற்கு, கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் தான் காரணம். பிரதமராக இருந்த ரணிலை, பதவியிலிருந்து நீக்க, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, அதிரடியாக சிறிசேன நியமித்தார். அதை எதிர்த்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில், ரணில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். இதையடுத்து, மீண்டும் பதவியில், ரணில் தொடர்கிறார்.

மூலக்கதை