51 ஆண்டுகளுக்கு பின்னர் காணாமல் போன ஏ.என்-12 பி.எல்-534 விமான பாகங்கள் இமாசலபிரதேசத்தில் கண்டெடுப்பு

தினகரன்  தினகரன்
51 ஆண்டுகளுக்கு பின்னர் காணாமல் போன ஏ.என்12 பி.எல்534 விமான பாகங்கள் இமாசலபிரதேசத்தில் கண்டெடுப்பு

இமாசலபிரதேசம்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-12 பி.எல்-534 விமானம் இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் ரோஹ்டங் பாஸ் என்ற சிகர பகுதியில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி இதற்காகவே தாகா பனிச்சிகரத்தில் டோக்ரா சாரணர் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாரணர் குழுவும், இந்திய விமானப்படையும் இணைந்து கடந்த 6-ம் தேதி மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கியது. 13 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் அந்த விமானத்தின் சில பாகங்களை 5240 மீட்டர் உயரமான தாகா பனிச்சிகரத்தில் இந்த குழுவினர் கண்டுபிடித்தனர். விமான என்ஜின், விமானத்தின் உடல் பகுதி, மின்சாதனங்கள், சுழல் விசிறி, எரிபொருள் டேங்க் பகுதி, ஏர் பிரேக் பகுதி, விமானி அறையின் கதவு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அந்த விமானத்தில் பயணித்த சிலரது தனிப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பகுதியில் முன்பு ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிக்கட்டிகளால் மூடப்பட்டு இருந்தது. இதனால் இந்த தேடுதல் பணி மிகவும் சிரமமாக இருந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் 51 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை