ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு, நமது அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சர்வதேச அமைப்புகளுக்கும் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றது.


காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாக்., மற்றும் சீனா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, மூக்குடைபட்டன. இதைத் தொடர்ந்து, எந்த விளைவுகளை சந்திக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பாக்., ராணுவம், திடீரென அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதே, இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்திலும் அது தொடருமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் பேசியதாவது:அண்டை நாடான பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டுமானால், முதலில் பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவை, அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


பாக்., உடனான பேச்சுகள் இனி, ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி, எங்களுடைய பேச்சு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி வருவதால், அதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசுவோம் என, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மூலக்கதை