அரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே! காத்திருக்குது பிஞ்சு குழந்தைகள்!

தினமலர்  தினமலர்
அரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே! காத்திருக்குது பிஞ்சு குழந்தைகள்!

கோவை:போதுமான விழிப்புணர்வு இல்லாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் வழங்கும், தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தாய்மார்கள் வழங்கும் பாலை நம்பி, மருத்துவமனையில் உயிர் வாழும், பச்சிளங்குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பசியாற்றுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், கோவை உட்பட ஏழு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கிகள் துவங்கப்பட்டன. கோவையில், 2015 ஆகஸ்டில் துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி, இன்று பல சிசுக்களின் உயிர்களை காப்பாற்றும், ஜீவாதாரமாக விளங்கி வருகிறது.பிறந்தவுடன் தாயால் கைவிடப்படும் குழந்தைகள், தாயை இழக்கும் குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தாய்ப்பால் வங்கிகள் தீர்வு தருகின்றன.
பத்து பிஞ்சு காத்திருப்புகோவை அரசு மருத்துவமனையில் இத்திட்டம் துவங்கியபோது, 138 தாய்மார்கள் பாலை தானமாக வழங்கினர். இதனால், 46 குழந்தைகள் பயன் பெற்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து, கடந்தாண்டுகளில், 2,000 தாய்மார்கள் பால் வழங்கியுள்ளனர்; 3,000 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கியின் வாயிலாக, 10 குழந்தைகளுக்கு பால் புகட்டப்படுகிறது. தாய்ப்பால் தானத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவால், இது போன்ற குழந்தைகளின் பசி போக்குவது யார் எனும் கேள்வி எழுகிறது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்ட போது, ஏராளமான தாய்மார்கள் தானமாக தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.
வெளிமாநிலத்தில் இருந்து, கோவை வந்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கூட, தாய்ப்பாலை தானமாக வழங்கிச் சென்றார்.ஆனால், தற்போது தாய்மார்களிடம் இது குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டது. இதனால், தாய்ப்பால் தானம் வழங்கும் தாய்மார் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். அரசு மருத்துவமனை சார்பில், தாய்ப்பால் தானம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தாய்ப்பால் தானமாக வழங்குவதால், தாய்மார்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. தாய்மார்கள் அச்சமடைய தேவையில்லை. தங்கள் குழந்தைகளுக்கு வழங்கியது போக, நாள் ஒன்றுக்கு மூன்று முறை, இவர்கள் தாய்ப்பாலை வங்கிகளுக்கு வழங்கலாம். குறைந்தபட்சம், 100 மி.லி., பாலை வழங்க முடியும். இதனால் தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.அசோகன் டீன், கோவை அரசு மருத்துவமனை'தேவைப்படுவோருக்குபால் வழங்குகிறோம்'
கோயம்புத்துார் பேரன்டிங் நெட்வொர்க் நிர்வாக அறங்காவலர் ஐஸ்வர்யா கூறுகையில், ''தாய்ப்பால் தானம் வழங்க விரும்பும் தாய்மார்களிடமிருந்து, பால் தானம் பெற்று தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, பற்றாக்குறை இருப்பது உண்மையே. தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தாய்ப்பால் தானம் என்பதால், யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. தேவைப்படுவோருக்கு எங்கள் அமைப்பு வாயிலாக, தாய்ப்பால் பெற்று தானம் வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

மூலக்கதை