முறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு

தினமலர்  தினமலர்
முறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு

'டெல்டா மாவட்ட பாசனத்திற்கு, காவிரி நீரை முறை வைத்து திறக்க வேண்டும்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு, நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரை பயன்படுத்தி, 13.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தற்போது, சாகுபடிக்கான ஏற்பாடுகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் நிலத்தை உழுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கியுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து வரும் நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், பொதுப்பணி துறையினர் இஷ்டத்திற்கு நீர் திறந்ததால், மேட்டூர் அணையில், கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுபோன்ற நிலை ஏற்படாதிருக்க, முறை வைத்து, பாசனத்திற்கு நீர் திறக்க, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

மழை நேரங்களில், நீர் மேலாண்மையை கடைபிடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.தேவையான நேரத்தில்,டெல்டா மாவட்ட செயற்பொறியாளர்கள் ஆலோசனை படி, கூடுதல் நீரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையை, அடுத்தாண்டு, ஜன., 28 வரை, தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

மூலக்கதை