பாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி! நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி

தினமலர்  தினமலர்
பாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி! நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி

மதுரை : மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்த நிலையில், 24.10.2011ல் வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. அதன் பரப்பும் 51.82 ச.கி.மீ.,ல் இருந்து 147.39 ச.கி.மீ., ஆக அதிகரித்தது.

மாநகராட்சியுடன் இணைந்ததால் சகல வசதியும் கிடைக்கும் என விரிவாக்க பகுதியினர் எதிர்பார்த்தனர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கு அப்பகுதியினர் திண்டாடுகின்றனர். குறிப்பாக பாதாள சாக்கடை வசதியின்றி விரிவாக்கப்பகுதி வார்டுகள் பின்தங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. பின் 1983ல் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

அதையடுத்து நகரில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சியுடன் இணைந்து 8 ஆண்டுகளாகியும் இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி செய்யப்படவில்லை. வைகை வடபகுதியில் இருந்து அதிக கழிவுநீர் ஆற்றில் கலந்து புனிதத்தை கெடுக்கிறது. குடியிருப்புகளில் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது.

வைகையை பாதுகாக்க வடக்கு பகுதியில் இணைக்கப்பட்ட வார்டுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு 529 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இந்நிதியை மாநில அரசு ஒதுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் மல்லுக்கட்டியும் நிதி கிடைத்தபாடில்லை. தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நிதி பெற முயற்சி நடக்கிறது. இதற்காக பிரத்யேக திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் தயாரிக்கிறது. நிதி கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் முதலில் பாதாள சாக்கடை திட்டம் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்ட 529 கோடியை விட கூடுதல் தொகை தேவை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இதுவரை 650 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கின்றன. இன்னும் 350 கோடி ரூபாய் உள்ளது. இதில் 250 கோடி ரூபாயை பாதாள சாக்கடை திட்டத்திற்கு பெற உள்ளோம். எஞ்சிய 100 கோடிக்கு வேறு சில பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். நிதி கிடைக்காதபட்சம் ஆசியன் வளர்ச்சி வங்கியை நாடுவோம் என்றார்.

மூலக்கதை