சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பைனலில் கஸ்னட்சோவாவுடன் மேடிசன் கீஸ் பலப்பரீட்சை: நம்பர் 1 ஆஷ்லி பார்தி ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பைனலில் கஸ்னட்சோவாவுடன் மேடிசன் கீஸ் பலப்பரீட்சை: நம்பர் 1 ஆஷ்லி பார்தி ஏமாற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவாவுடன் உள்ளூர் வீராங்கனை மேடிசன் கீஸ் மோதுகிறார்.அரை இறுதியில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தியுடன் (ஆஸி.) மோதிய கஸ்னட்சோவா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனையாக டாப் 10ல் இருந்த கஸ்னட்சோவா (34 வயது), காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்ததால் தற்போது 153வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் சின்சினாட்டி ஓபனில் களமிறங்கிய அவர், தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை சோபியா கெனினை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் கஸ்னட்சோவா - சோபியா கெனின் மோதுகின்றனர்.ஜோகோவிச் முன்னேற்றம்: இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் காஸ்கேவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். பைனலில் ஜோகோவிச் - காபின் மோதுகின்றனர்.மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் செக் குடியரசின் லூசி ராடெக்கா - ஆண்ட்ரியா கிளபாக் (ஸ்லோவகியா) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னா லீனா குரோயன்பெல்ட் - டெமி ஷுவர்ஸ் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மூலக்கதை