6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை: 60 புள்ளிகளை அள்ளியது

தினகரன்  தினகரன்
6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை: 60 புள்ளிகளை அள்ளியது

காலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன், இலங்கை 267 ரன் எடுத்தன. 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதையடுத்து 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 71 ரன், திரிமன்னே 57 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 161 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. திரிமன்னே 64 ரன் (163 பந்து, 4 பவுண்டரி) எடுத்து சாமர்வில்லி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 10 ரன்னில் பெவிலியன் திரும்ப, அபாரமாக விளையாடிய கருணரத்னே 122 ரன் (243 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் வாட்லிங் வசம் பிடிபட்டார். குசால் பெரேரா 23 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.இலங்கை அணி 86.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஏஞ்சலோ மேத்யூஸ் 28, தனஞ்ஜெயா டி சில்வா 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், சவுத்தீ, சாமர்வில்லி, அஜாஸ் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை கேப்டன் கருணரத்னே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் 60 புள்ளிகளைக் குவித்த இலங்கை அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இலங்கை 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் 22ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை