நாளை 100ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆப்கான் குண்டுவெடிப்பில் 63 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை 100ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆப்கான் குண்டுவெடிப்பில் 63 பேர் பலி

* 180க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை
* திருமண விழாவில் புகுந்து தற்கொலை படை தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நாளை 100வது சுதந்திரம் கொண்டாடப்படும் நிலையில், காபூலில் நேற்றிரவு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் உடல் சிதறி பலியாகினர்; 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருமண விழாவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தலிபான்களுடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரும் இணைந்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை சீரமைக்க, அந்நாட்டுக்கு இந்தியா தரப்பில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.



ஆப்கானிஸ்தான் கடந்த 1919ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதையடுத்து, நாளை (ஆக.

19) 100வது சுதந்திர தின ஆண்டு விழாவை அந்நாடு கொண்டாட உள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் மேற்கு காபூலில் உள்ள ஷாஹ்ர்-இ- துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்றிரவு இந்திய நேரப்படி 10. 30 மணியில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது. இதற்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர்.

விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார்.

இதில், பலர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.



அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் உட்பட 63 பேர் பலியானதாகவும், 180க்கும் ேமற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து போலீஸ் பூத் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 145 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் மேற்கு காபூல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் கழித்து, தலிபான் தீவிரவாத அமைப்பு, மேற்கண்ட தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில், 3 தீவிரவாதிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தலிபான்களுக்கும், உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் இடையேயான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கஜினி மாகாணம், ஹட்டா கிராமத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை குறிவைத்து நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படை  வான்தாக்குதல் நடத்தியது. இதில் 6 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதேபோல், பால்க் மாகாணத்தில் ஷோல்கிராஹ் மாவட்டத்தில் நடந்த மற்றொரு வான்தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்த தாக்குதல்களில் 21 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், அதற்கு பதிலடியாக தற்போது திருமண விழாவில் பொதுமக்கள் 63 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றிரவு நடந்த இந்த கொடூர தற்கொலைப்படை தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாளை ஆப்கானில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், அந்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

.

மூலக்கதை