பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

தினகரன்  தினகரன்
பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பஞ்சகுலா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு  தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அவர் அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரானில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அதன்பின் அவர் டிவிட்டரில் வெளியிட்ட  பதிவில், `‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஆனால், எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலையை பொறுத்தது’’ என கருத்து தெரிவித்திருந்தார். இது மக்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரியானா மாநிலம் பஞ்சகுலா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்தியமைச்சர் ராஜ்நாத், காஷ்மீரின் வளர்ச்சிக்காக மட்டுமே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. ஆனால், நமது அண்டை நாடு,  இந்தியா தவறு செய்துவிட்டதாக கூறி சர்வதேச நாடுகளின் கதவை தட்டியது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்படி பேச்சுவார்த்தை நடந்தால், ஆக்கிரமிப்பு  காஷ்மீர் குறித்து மட்டுமே பேசுவோம்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின், பாலகோட்டில், நமது ராணுவம் நடத்திய தாக்குதலை விட பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம், பாலகோட்டில், இந்தியா  தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்துள்ளார் என்றும் கூறினார்.

மூலக்கதை