'ராமர் கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது'

தினமலர்  தினமலர்
ராமர் கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது

புதுடில்லி : 'அயோத்தியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. அங்கிருந்த கோவிலை இடித்து தான், மசூதியைக் கட்டியுள்ளனர்' என, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆறாவது நாள்:

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி அடிப்படையில் விசாரித்துவருகிறது. விசாரணையின், ஆறாவது நாளான, நேற்று, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியாதன், தன் வாதத்தை தொடர்ந்தார்.

அவர் கூறியதாவது: அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்துள்ள பகுதியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இது, ஹிந்து மத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, எப்படி சாத்தியம் என்ற கேள்விக்குள் நீதிமன்றம் செல்லக் கூடாது. ஆங்கில சுற்றுலா பயணியான, வில்லியம் பின்ச், 1608 - 1611 கால கட்டத்தில், இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். அவர் எழுதியுள்ள புத்தகத்தில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் கருதும் இடத்தில், கோட்டை இருந்ததாக கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடத்தில் தான், ராமர் பிறந்ததாக, ஹிந்துக்கள் நம்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணி, மான்ட்கோமரி மார்ட்டின், யூத மதப் பிரசாரகர், ஜோசப் டிபன்தலர் ஆகியோரும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக மக்கள் நம்புவதாக, தங்களுடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். முகலாய பேரரசர், பாபரின் நினைவுகளின் தொகுப்பு எனப்படும்,'பாபர்நாமா' என்ற புத்தகத்தில், இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 19ம் நுாற்றாண்டுக்கு முன், பாபர் மசூதி இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை தகர்த்து தான், அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது.

உறுதி:

இது தொடர்பாக, இரண்டு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. கோவிலை பாபர் இடிக்கச் சொன்னதாக, ஒரு தகவல் உள்ளது.மற்றொன்று, முகலாய மன்னரான, அவுரங்கசீப், கோவிலை இடித்து, மசூதி கட்டியதாக தகவல் உள்ளது. ஆனால், மசூதியில் இருந்த கல்வெட்டுகளில், பாபர் தான், அதைக் கட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இருந்து, அயோத்தியில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது. ஹிந்துக்கள், ராமர் பிறந்த இடமாக நம்பிக்கை வைத்துள்ள இடத்தில், மசூதியை கட்டியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை