கேரளாவில் மழை; பலி 102 ஆக உயர்வு

தினமலர்  தினமலர்
கேரளாவில் மழை; பலி 102 ஆக உயர்வு

திருவனந்தபுரம் : பேய் மழையின் பிடியில் சிக்கியுள்ள கேரளாவில், பலியானோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும்(ஆக.,14) பல மாவட்டங்களில், பலத்த மழை தொடர்ந்ததால், மக்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது.


கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள, மலப்புரம், கண்ணுார் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு, அதிதீவிர மழை பெய்யும் என்பதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை, அங்கு பலத்த மழை பெய்தது.இதனால், ஏற்கனவே பெருகி ஓடிய ஆறுகள், கால்வாய்களில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை, அங்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

நிலச்சரிவு


மழை நின்றால் தான், நிலச்சரிவில் சிக்கியவர்கள், மண் குவியலில் இறந்து கிடப்பவர்களை மீட்க முடியும் என, மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்தோர் கூறினர். குறிப்பாக, பலத்த மழையால், நிலச்சரிவு ஏற்பட்ட, கவலப்பாரா வன கிராமத்தில், நேற்றும், மீட்புப் பணி தொடர முடியாத நிலை காணப்பட்டது. மண் மூடிய வீடுகளில் இறந்து கிடப்பவர்களை, மீட்க முடியாத அளவுக்கு, மழை பெய்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றும் பார்வையிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், வீடுகளை இழந்தோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அறிவித்தார். நேற்று மாலை நிலவரப்படி, அந்த மாநிலத்தில், மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்துள்ளது; இரண்டு லட்சம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுப்பயணம்


காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல், கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக உள்ளார். அவர் அந்த பகுதிகளில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்தி காந்ததாசுக்கு கடிதம் எழுதி, விவசாயிகளின் பயிர் கடனை திருப்பிச் செலுத்தும் தேதியை, டிசம்பர், 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.


கர்நாடகா:


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், எடியூரப்பா தலைமையிலான அரசு அமைந்துள்ள கர்நாடகாவில், மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை, 58 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நீர் நிலைகளுக்கு, நீர் வரத்து குறைந்ததால், அந்தப் பகுதிகளில், நேற்று நிலைமை முன்னேற்றம் அடைந்திருந்தது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள், முடுக்கி விடப்பட்டு உள்ளன.

மஹாராஷ்டிரா:


மஹாராஷ்டிராவின் கோலாபூர், சாங்கிலி மாவட்டங்களில், மழை குறைந்து உள்ளதால், ஆறுகளில் வெள்ளம் தணிந்து உள்ளது. இந்த பகுதிகளில், 6.45 லட்சம் பேர், வசிப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், ''மழை நிவாரண பணிகளுக்காக, மத்திய அரசிடம் இருந்து,9800 கோடி ரூபாய் நிதியுதவி எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

மூலக்கதை