அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவு; கூட்டம் அதிகரிப்பால் குலுங்குது காஞ்சி

தினமலர்  தினமலர்
அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவு; கூட்டம் அதிகரிப்பால் குலுங்குது காஞ்சி

காஞ்சிபுரம்: ''காஞ்சி அத்தி வரதர் வைபவம், திட்டமிட்டபடி நாளை முடிவடைகிறது. இன்று, ஆடி கருட சேவை நடைபெறுவதால், மதியம், 12:00 மணிக்கு, கிழக்கு கோபுரம் மூடப்படும்,'' என, கலெக்டர் அறிவித்துள்ளார்.


காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில், அத்தி வரதர் வைபவம், 45 நாட்களாக, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அத்தி வரதரை தரிசிக்க, நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:30 மணிக்கு, நடிகர், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர்.நேற்று மதியம், முன்னாள் பிரதமர், தேவகவுடா மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர், குமாரசாமி ஆகியோர் தரிசித்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி தொகுதியின் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., மஸ்தான், குடும்பத்துடன் வந்து தரிசித்தார்.

வரும், 17ம் தேதியுடன் வைபவம் முடிவதால், இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள், வரதராஜ பெருமாள் கோவிலில் திரள வாய்ப்புள்ளது. இதனால், பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நிருபர்களிடம் நேற்று, கலெக்டர், பொன்னையா கூறியதாவது: வியாழக்கிழமை மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஆடி கருடசேவை நடைபெற உள்ளது. இதனால், மதியம், 12:00 மணிக்கு, கிழக்கு கோபுர கதவு மூடப்படும். அந்த நேரத்தில், கோவிலுக்குள் வந்தோர் அனைவரும், தரிசனம் முடித்த பிறகே, தரிசனம் நிறுத்தப்படும். கருடசேவை முடிந்ததும், இரவு, 8:00 மணிக்கு பின், அத்தி வரதர் சேவை தொடரும்.


வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., தரிசனம், வியாழக்கிழமை மதியம், 12:00 மணியுடன் முடிகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி, பொது தரிசனம் மட்டும் உள்ளது. வெள்ளிக்கிழமை பொது தரிசனம் மட்டும் உண்டு. அன்று, விடிய விடிய பக்தர்கள் வந்தாலும் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை அதிகாலையில், சேவை நிறுத்தப்படும்.அன்றைய தினம் மாலை அல்லது இரவில், அனந்தசரஸ் குளத்தில், அத்தி வரதரை வைக்கும் பணிகள் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

கோவிலில் பிரசவம்:


வேலுார் மாவட்டம், பானாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி விமலா, 25. உறவினர்களுடன், நேற்று காலை, அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்தார். பிரசவத்துக்கு, வரும், 27ம் தேதி கணிக்கப்பட்டிருந்தது. அதற்குள், அத்தி வரதரை தரிசனம் செய்து விட வேண்டும் என, கோவிலுக்கு வந்துள்ளார். தரிசனம் முடித்து, கோவிலில் இருந்து வெளியே வந்தபோது, விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த செவிலியர், யோகவல்லி, அவருக்கு பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவத்தில், விமலாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாய், குழந்தை இருவரையும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து, விமலா கணவர் அசோக்குமார் கூறுகையில், ''தாயும் சேயும், நலமுடன் உள்ளனர். அத்தி வரதரை பார்த்த பின், ஆண் குழந்தை பிறந்ததால், குழந்தைக்கு, 'அத்தி வரதா' என, பெயர் வைத்துள்ளோம்,'' என்றார்.

'டூ-வீலர் சர்வீஸ்'


கோவிலில் இருந்து தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்களை, கார் பார்க்கிங் இடத்திற்கோ அல்லது, ரங்கசாமி குளம், பெரியார் நகர், ஓரிக்கை போன்ற பஸ் நிலையங்களுக்கோ அழைத்து செல்ல, இளைஞர்கள் சிலர், டூ-வீலர் சர்வீஸ் செய்கின்றனர். அவர்கள், கோவிலில் இருந்து வரும் பக்தர்களுக்காக, அண்ணா அவென்யூ, மலையாள தெரு போன்ற இடங்களில் காத்திருக்கின்றனர். நடந்து செல்லும் பக்தர்களிடம், 'இரு சக்கர வாகனத்தில் வாருங்கள்; நீங்கள் விரும்பும் இடத்தில் விட்டுவிடுகிறேன். ஒரு ஆளுக்கு, கட்டணமாக, 50 ரூபாய் தாருங்கள்' என, கேட்கின்றனர். அத்தி வரதர் வைபவத்தால், சின்ன காஞ்சிபுரத்தில், வேலையின்றி இருக்கும் சில இளைஞர்கள், இது போன்ற பணியை துவங்கியுள்ளனர்.

மூலக்கதை