கிறிஸ் கேல் 72, லூயிஸ் 43 ரன் விளாசல் வெஸ்ட் இண்டீசுக்கு அதிரடி தொடக்கம்

தினகரன்  தினகரன்
கிறிஸ் கேல் 72, லூயிஸ் 43 ரன் விளாசல் வெஸ்ட் இண்டீசுக்கு அதிரடி தொடக்கம்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் - எவின் லூயிஸ் ஜோடி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில், அபாரமாக விளையாடிய இந்தியா 3-0 என  ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. அடுத்து இரு அணிகளும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகின்றன. கயானா, புராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், டிரினிடாடில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா  டி/எல் விதிப்படி 59 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்ம், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் காட்ரெல்,  தாமசுக்கு பதிலாக கீமோ பால், பேபியன் ஆலன் இடம் பெற்றனர். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார்.வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், எவின் லூயிஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணி 9.1 ஓவரிலேயே 100 ரன்னை எட்டியது குறிப்பிடத்தக்கது. கேல் - லூயிஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவரில் 115 ரன் சேர்த்து மிரட்டினர். கேல் 30 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.எவின் லூயிஸ் 43 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் தவான் வசம் பிடிபட்டார். கிறிஸ் கேல் 72 ரன் (41 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கலீல் அகமது வேகத்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.ஷாய் ஹோப் 19 ரன், ஹெட்மயர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மூலக்கதை