சென்னையில் இன்று டிஎன்பிஎல் டி20 பைனல் சாம்பியன் பட்டம் வெல்ல டிராகன்ஸ் - கில்லீஸ் பலப்பரீட்சை: இரவு 7.15க்கு தொடக்கம்

தினகரன்  தினகரன்
சென்னையில் இன்று டிஎன்பிஎல் டி20 பைனல் சாம்பியன் பட்டம் வெல்ல டிராகன்ஸ்  கில்லீஸ் பலப்பரீட்சை: இரவு 7.15க்கு தொடக்கம்

சென்னை: டிஎன்பிஎல் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.15க்கு தொடங்குகிறது.தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் நடப்பு சீசனில் மொத்தம் 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் 7 லீக் ஆட்டத்தில் விளையாடிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4  இடங்களைப் பிடித்த டிராகன்ஸ் (12), சூப்பர் கில்லீஸ் (10), மதுரை பேந்தர்ஸ் (10), காஞ்சி வீரன்ஸ் (8) அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.முதலாவது குவாலிபயர் போட்டியில் சூப்பர் கில்லீஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மதுரை பேந்தர்ஸ், அடுத்து குவாலிபயர் 2 ஆட்டத்தில் டிராகன்சை எதிர்கொண்டது. இதில் 45 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற டிராகன்ஸ்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இந்த நிலையில், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் டிராகன்ஸ் - சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.15க்கு தொடங்கும் இப்போட்டியில்  வென்று கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.

மூலக்கதை