ராஸ் டெய்லர் பொறுப்பான ஆட்டம் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 203: பந்துவீச்சில் அகிலா அசத்தல்

தினகரன்  தினகரன்
ராஸ் டெய்லர் பொறுப்பான ஆட்டம் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 203: பந்துவீச்சில் அகிலா அசத்தல்

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்துள்ளது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜீத் ராவல், டாம் லாதம் களமிறங்கினர். நிதானமாக  விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவரில் 64 ரன் சேர்த்தனர்.லாதம் 30 ரன் எடுத்து அகிலா தனஞ்ஜெயா சுழலில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன்  வில்லியம்சன் அதே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த ராவல் 33 ரன் எடுத்து  பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து 71 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், ராஸ் டெய்லர் - நிகோல்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 100 ரன் சேர்த்தது. டெய்லர் அரை சதம் அடித்தார். நிகோல்ஸ் 42 ரன் (78 பந்து, 2 பவுண்டரி), வாட்லிங் 1 ரன் எடுத்து தனஞ்ஜெயா சுழலில்  அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி 60.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்திருக்க, மழை கொட்டியதால் ஆட்டம் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது.அடிக்கடி மழை குறுக்கிட்ட நிலையில் நியூசிலாந்து அணி 68 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்திருக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டெய்லர் 86 ரன் (131 பந்து, 6 பவுண்டரி), சான்ட்னர் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 22 ஓவரில் 2 மெய்டன் உட்பட 57 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை