சலுகைகள் பெற விட மாட்டேன் இந்தியா இனியும் வளரும் நாடு அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

தினகரன்  தினகரன்
சலுகைகள் பெற விட மாட்டேன் இந்தியா இனியும் வளரும் நாடு அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: வளரும் நாடுகள் என்ற பெயரில் இந்தியாவும், சீனாவும் உலக வர்த்தக  அமைப்பின் சலுகைகளை இனியும் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என  அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.`அமெரிக்கா  அமெரிக்கர்களுக்கே’ என்று எப்போதும் முழங்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு  டிரம்ப், அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்  சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று  கூட  விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு  வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும்  அமெரிக்க  இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், இருநாடுகளும் மறைமுக  வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன.இதற்கிடையே, `சீனா, துருக்கி,  இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதன் அடிப்படையில் வளரும் நாடுகளாக கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படுகிறது?’ என்று உலக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச  வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் உலக வர்த்தக  அமைப்பிடம், கடந்த ஜூலை மாதம்  அமெரிக்கா கேள்வி எழுப்பியது. மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளில் உள்ள  ஓட்டைகளை, பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்த நாடுகள் பயன்படுத்தினால்  அவற்றின் மீது கடும் நடவடிக்கை  எடுக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு  அதிகாரம் அளிக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.இந்நிலையில்,  பென்சில்வேனியா மாகாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  பேசிய டிரம்ப், ``ஆசியாவின் மிகப் பெரிய இரண்டு பொருளாதார நாடுகளான  இந்தியாவும், சீனாவும் இனியும் வளரும் நாடுகள் அல்ல.  ஆனால், அவை தங்களை  இன்னும் வளரும் நாடுகளாக அறிவித்துக் கொண்டு, உலக வர்த்தக அமைப்பிடம்  இருந்து சலுகைகளை பெற்று வருகின்றன. இதனை இனியும் அனுமதிக்க முடியாது’’  என்று கூறினார்.

மூலக்கதை