வளர்ந்த இந்தியாவுக்கு சலுகைகள் கூடாது: டிரம்ப்

தினமலர்  தினமலர்
வளர்ந்த இந்தியாவுக்கு சலுகைகள் கூடாது: டிரம்ப்

வாஷிங்டன்: "ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவை இனியும் வளர்ந்து வரும் நாடுகளாக கருத முடியாது. அவை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள். அதனால் டபிள்யூ.டி.ஓ. எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் சலுகைகளைப் பெற முடியாது," என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சீனாவுடன் வர்த்தகப் போர் நடந்து வருகிறது. சீனப் பொருட்களுக்கான வரிகளை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியது. அதேபோல் இந்தியாவுக்கு எதிரான வர்த்தக உறவிலும் பிரச்னைகள் உள்ளன. பல்வேறு பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியது. நமது அரசும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. இது தொடர்பாக இரு தரப்பும் பேசி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டபிள்யூ.டி.ஓ. எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடு குறித்து டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தார். 'எந்த அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் என்ற அந்தஸ்து அளிக்கப்படுகிறது' என அவர் கேள்வி எழுப்பினார். இந்தியா சீனா மற்றும் துருக்கியை மனதில் வைத்து அவர் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகளுடனான வர்த்தக உறவில் பல்வேறு சலுகைகள் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியிடம் இந்தப் பிரச்னை குறித்து உலக வர்த்தக அமைப்பில் கேள்வி எழுப்பும்படி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பெனில்ஸ்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: இந்தியா, சீனா ஆகியவை இன்னும் வளர்ந்து வரும் நாடுகள் அல்ல; பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளாக உள்ளன. ஆனால் வளர்ந்து வரும் நாடு என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இந்த நாடுகள் பல்வேறு சலுகைகளை நீண்டகாலமாக அனுபவித்து வருகின்றன. அவர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. இனியும் இது தொடர விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை