காஷ்மீரை கைவிட மாட்டோம்: சொல்கிறார் பாக்., அதிபர்

தினமலர்  தினமலர்
காஷ்மீரை கைவிட மாட்டோம்: சொல்கிறார் பாக்., அதிபர்

இஸ்லாமாபாத்: ''காஷ்மீர் மக்களை எந்த நிலையிலும் நாம் கைவிட மாட்டோம். காஷ்மீரிகளும் பாகிஸ்தானியர்களும் ஒரே மக்கள் தான். எப்போதும் அவர்களுக்கு துணை நிற்போம்,'' என பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி கூறினார்.


பாகிஸ்தான் நேற்று 73வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இஸ்லாமாபாதில் நடந்த விழாவில் பீரங்கி குண்டுகள் முழங்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதை முன்னிட்டு அந்நாட்டின் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.

இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஆரிப் அல்வி பேசியதாவது: பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. காஷ்மீர் விவகாரத்தை பேச்சு மூலம் தீர்க்கவே விரும்புகிறது. நம் அமைதி விருப்பத்தை இந்தியா தவறாக புரிந்து கொண்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்வோம். காஷ்மீரி மக்களும் பாகிஸ்தானியர்களும் ஒன்றானவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் காஷ்மீரிகளை நாம் கைவிட மாட்டோம். அவர்களுடன் இது வரை இணைந்தே இருந்துள்ளோம்; இனிமேலும் அவ்வாறே இருப்போம். நம் இருவரின் சோகங்களும் பொதுவானவை. இவ்வாறு அவர் பேசினார்.

அதுபோல டில்லியில் உள்ள பாக். ஐ - கமிஷன் அலுவலகத்திலும் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் வாழ்த்துச் செய்தியை தற்காலிக ஐ - கமிஷனர் செய்யது ஹைதர் ஷா வாசித்தார்.

இனிப்பு இல்லை:


ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து, இந்திய சுதந்திர தினத்தை, கறுப்பு நாளாக பாகிஸ்தான் இன்று அனுசரிக்க உள்ளது. வழக்கமாக, ரம்ஜான், பக்ரீத், பாகிஸ்தான் சுதந்திர தினம் போன்ற நாட்களில் இரு நாடுகளின் எல்லையான வாஹா - அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கிருக்கும் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தால் திங்கள் கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை மற்றும் நேற்றைய பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்பு எதுவும் இந்திய வீரர்களுக்கு பாக். தரப்பிலிருந்து தரப்படவில்லை.

இதற்கிடையே இஸ்லாமாபாதில் பாகிஸ்தானுக்கான இந்திய துணை ஐ - கமிஷனர் கவுரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தலைமை இயக்குனர் முகமது பைசல் நேற்று அழைத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக கண்டித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

அத்துமீற இந்தியா திட்டம்: உசுப்பிவிடுகிறார் இம்ரான்கான்


''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது அத்துமீற, இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எவ்வித அத்துமீறலிலும் இந்தியா இறங்கினால், முழு வேகத்துடன் அதை பாகிஸ்தான் எதிர்கொள்ளும்,'' என, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் பேசினார்.


பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு, முசாபராபாதில் உள்ள, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பிரதமர் மோடி, மிகப் பெரிய தவறை செய்து விட்டார். அவரின் கடைசி அஸ்திரத்தை, காஷ்மீர் மீது பாய்ச்சி விட்டார். அதற்கான பலனை, அவரும், பா.ஜ.,வும் அனுபவித்தே தீரும். ஏனெனில், காஷ்மீர் விவகாரத்தை, அவர்கள் தான், சர்வதேச பிரச்னையாக்கி விட்டனர்.

காஷ்மீர் மக்களின் குரலாக தொடர்ந்து நான் ஒலிப்பேன். அனைத்து சர்வதேச அமைப்புகளிலும், இதற்காக நான் குரல் கொடுப்பேன். காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகள் அமைதி காக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்தால் தான், உலக நாடுகள் இந்த விவகாரத்தை கவனிக்கும் என நினைக்கிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது அத்துமீற, இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எவ்வித அத்துமீறலிலும் இந்தியா இறங்கினால், முழு வேகத்துடன் அதை பாகிஸ்தான் எதிர்கொள்ளும்.

அவ்வாறு எந்த செயலில் இந்தியா இறங்கினாலும், அவற்றை கடைசி வரை பாகிஸ்தான் எதிர்க்கும். இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பு, சர்வதேச அமைப்புகளுக்கும், நாடுகளுக்கும் தான். இவ்வாறு, இம்ரான் கான் பேசினார்.

மூலக்கதை