பரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும்; சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
பரஸ்பரம் புரிந்து கொள்ள வேண்டும்; சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

பீஜிங்: 'இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு இருதரப்பு உறவு மட்டுமல்ல; அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பரஸ்பரம் மற்றவர்களுடைய பிரச்னைகளை கவலைகளை புரிந்து கொண்டு வேறுபாடுகளை களைய வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக நம் அண்டை நாடான சீனாவுக்கு சென்றுள்ளார். முன்னாள் ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ஜெய்சங்கர் 2009 முதல் 2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ, துணை அதிபர் வாங்க் குயிஷான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மேலும் இந்தாண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ள உள்ள பயணம் குறித்தும் விவாதித்தார்.

சீன பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் நாடுகள் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. இதுவரை இரு தரப்பு உறவு என்பது நம்முடைய பிரச்னையாக இருந்தது. ஆனால் தற்போது அது உலக அளவில் உற்று பார்க்கப்படும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுவதாக மாறி உள்ளது.

அதனால் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உள்ள பிரச்னைகளை கவலைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை களைய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், அமைதி, வளர்ச்சி, ஸ்திரதன்மை ஏற்படுவதற்கு, இரு நாடுகளும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதுடன் ஒத்துழைத்தும் செயல்பட வேண்டும்.

தற்போது இரு நாட்டிலும் உள்ளவர்கள் குறிப்பாக இளைஞர்கள் நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். நமது வரலாறு குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மக்கள் இடையேயான சந்திப்புகள் அதிகம் நடக்க வேண்டும். இதற்காக கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை