காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: அச்சுறுத்தலை சமாளிக்க தயார் நிலை...இந்திய ராணுவம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: அச்சுறுத்தலை சமாளிக்க தயார் நிலை...இந்திய ராணுவம் அறிவிப்பு

ஸ்ரீநகர்: நாட்டின் 73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 17 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவு தகவல் வெளியாகி உள்ளது. மத்திய  அமைச்சர்கள், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள், முப்படை தளபதிகள், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், சாதனையாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிட கூடாது என்பதில்  பாதுகாப்பு படையினர் கழுகு பார்வை கொண்டு கண்காணித்து வருகின்றனர். இதற்காக, தேசிய பாதுகாப்பு கமாண்டோ, ராணுவம், எஸ்பிஜி கமாண்டோ, டெல்லி போலீசார் 1,000 பேர், சிஆர்பிஎப் வீரர்கள் என டெல்லி செங்கோட்டையை  சுற்றிலும் பன்னடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தலைநகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் புதிதாக வாடகைக்கு வந்தவர்களின் வீடு என பல்வேறு இடங்களில் டெல்லி போலீசார் தகவல் சேகரித்து சோதனை நடத்தியுள்ளனர். சுதந்திர தினத்தன்று டெல்லியில் மக்கள்  நடமாட்டம் அதிகமுள்ள 17 இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் செங்கோட்டை அமைந்திருக்கும் பகுதிகளில் பட்டங்கள் பறப்பதை தடுக்கும்  வகையில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் வரை தலைநகரில் ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் போன்றவற்றை பறக்க விடுவதற்கு தடை  விதிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த பயங்கரவாத குழுக்களை ஊடுருவச்செய்ய  முயற்சிக்கும் பாகிஸ்தான் தரப்பு அச்சுறுத்தலை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை