நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு இன்று 73வது சுதந்திர தின கொண்டாட்டம்: செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு இன்று 73வது சுதந்திர தின கொண்டாட்டம்: செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் 73வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, டெல்லி செங்கோட்டையில்  பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலைகளிலும், செங்கோட்டை சுற்றியுள்ள சாலைகளிலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இதே போல், அனைத்து  மாநிலங்களில் முக்கிய நகரங்களிலும், எல்லையோரமும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தொடர்ந்து 6வது முறையாக சுதந்திர தின உரையாற்ற  இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது உரையில் காஷ்மீர் விவகாரமும் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் பதற்றமான சூழல் இன்னும் தணியவில்லை. இந்த நிலையில், அம்மாநிலத்திலும் சுதந்திரன தின விழா சிறப்பாக கொண்டாடும் வகையில், வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாஜ்பாய்யை சமன் செய்கிறார்:  இதுவரை பாஜ கட்சியிலிருந்து வந்த பிரதமர்களில்  வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை (1998-2003) செங்கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரை ஆற்றி இருக்கிறார். இந்த சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார். வளர்ச்சி சாத்தியமாகும்: காஷ்மீர் குறித்து ஐஏஎன்எஸ்  செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘குடும்ப அரசியல்வாதிகள், தீவிரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுயநல அமைப்பினர் போன்றவர்கள்தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் அனைவருமே  இந்த முடிவை வரவேற்கிறார்கள். இது அவசியமானது, ஆனால், சாத்தியமற்றது என மக்கள் கருதிய விஷயம் இன்று செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதே போல,் காஷ்மீர் மக்கள் விரும்பும் வளர்ச்சியும் சாத்தியமாகும்’’ என்றார்.காஷ்மீர் பாதுகாப்பு படையினருக்கே அதிக பதக்கங்கள்சுதந்திர தினத்தன்று, துணை ராணுவப்படை, மத்திய ஆயுத போலீஸ் படை, மாநில போலீஸ் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வீர பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டு  946 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதில், தீவிரவாத எதிர்ப்பு பிரிவில் 180 விருதுகளில், காஷ்மீர் பாதுகாப்பு படையினர் 114 பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளனர். ஜனாதிபதி போலீஸ் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 177  பேருக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், போலீஸ் பதக்கத்தை 21 தமிழக போலீசார் பெறுகின்றனர்.

மூலக்கதை