'உல்லாசமாக சுற்ற மொபைல் பறித்தோம்'

தினமலர்  தினமலர்
உல்லாசமாக சுற்ற மொபைல் பறித்தோம்

சென்னை : ''உல்லாசமாக சுற்ற பணம் இல்லாததால், காதலனுடன் சேர்ந்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தோம்,'' என, கைதான இளம் பெண், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசன்னா லேப்சா, 42; நுங்கம்பாக்கத்தில், அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரது வீட்டு உரிமையாளரின் மகள், ரோஹிணியுடன், 12ம் தேதி காலை, 7:30 மணியளவில், தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே, ஜி.என்.செட்டி சாலை வழியாக நடந்து சென்றார்.இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், பிரசன்னா லேப்சாவின் கை பையை பறித்து, பின்னால் அமர்ந்திருந்த, இளம் பெண்ணிடம் கொடுத்தார். அதில், மொபைல் போன் இருந்தது.போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை, போலீசாரின், 'வாட்ஸ் ஆப்' குழுவில் பரப்பினர்.

அதில் இருந்த வாகன பதிவு எண்ணை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், சம்மந்தப்பட்ட இருசக்கர வாகனம், சைதாப்பேட்டையில் பார்த்ததாக கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ராஜூ மற்றும் ஸ்வேதாவை, நேற்று கைது செய்தனர்.போலீசாரிடம், ஸ்வேதா அளித்த வாக்குமூலம்:கரூரில், பெற்றோருடன் வசித்து வந்தேன். அங்குள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிளஸ் 2 படித்தேன். தாம்பரத்தில் உள்ள, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இளங்கலை, விஷூவல் கம்யூனிகேஷன், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.உடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்தேன். எனக்கு, சிகரெட் மற்றும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

இரவு நேர, 'கிளப்'களுக்கும் செல்வேன். ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன்.இதனால், எங்கள் காதல் தோல்வியில் முடிந்தது. கஞ்சாவும் புகைத்துள்ளேன். சூளைமேடைச் சேர்ந்த, ராஜூவுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தோம்.ராஜூ, மொபைல் போன் பறிப்பு, இருசக்கர வாகனங்கள் திருடுவதில் கில்லாடி. பெற்றோரிடம் இருந்து, 15 நாட்களுக்கு முன், 30 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தேன். கல்லுாரி விடுதியை விட்டு வெளியேறி, ராஜூவுடன், சைதாப்பேட்டையில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.கையில் இருந்த பணம் காலியாகிவிட்டது. இதனால், 10ம் தேதி, வேளச்சேரியில் உள்ள, பிரபல வணிக வளாகம் அருகே, ராஜூவுடன் சென்று, இருசக்கர வாகனத்தைதிருடினோம்.

பின், அப்பகுதியில் சென்ற ஒருவரிடம், மொபைல் போனை பறித்து, பர்மாபஜாரில், 5,000 ரூபாய்க்கு விற்றோம். அந்த பணமும் செலவானது. சிகரெட் புகைக்க கூட, பணம் இல்லை. கல்வி கட்டணமும் செலுத்த வேண்டி இருந்தது. இதனால், ராஜூவும், நானும் சேர்ந்து, தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டோம். இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.

மூலக்கதை