மாணவர்கள் தெரிந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் தியாகத்தை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்: அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாணவர்கள் தெரிந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் தியாகத்தை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்: அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி. எம். எஸ். முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறவேளையில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவுகூர வேண்டியது அவசியமாகும். இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை.

நாட்டு விடுதலைக்காக போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்களின் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்கு தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்ற தியாகங்கள் மறைந்து விட்டது என்றே கூறலாம்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத், முகம்மது இஸ்மாயில் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர். இன்னும் பல லட்சம் முஸ்லிம்கள் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியுள்ளனர்.

இப்படி இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இஸ்லாமிய தலைவர்களின் தியாகம், வீரம் ஆகியவை திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர் தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தொகுப்பாக இடம்பெற செய்து,  மாணவ சமுதாயத்தினருக்கு இஸ்லாமிய தியாகிகள்பற்றி அறிந்துகொள்ள தமிழக அரசும், பள்ளிகல்வித்துறையும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை