அரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் முக்கிய நபர்கள் தொடர்பான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் சரியாக விசாரணை நடத்தவில்லை’ என்று, டெல்லியில் நடந்த கருத்தரங்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், அந்த அமைப்பின் முதல் இயக்குனர்  டி. பி. கோலியை நினைவு கூரும் வகையில் டி. பி. கோலி நினைவகம்  அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் டி. பி. கோலி நினைவாக கருத்தரங்கு நடைபெறும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டி. பி. கோலி நினைவகத்தில் நேற்று நடந்த 18வது ஆண்டு கருத்தரங்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான  வழக்குகளில், சில சமயங்களில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை  என்பது எதார்த்தமான உண்மை.

ஆனால், இதுமாதிரி அடிக்கடி நிகழவில்லை என்பதும்  உண்மைதான். வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கிடைக்காத சமயங்களில், சிபிஐ  நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் வெளியில் தெரியவரும்.

சிபிஐ அமைப்பில்  உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்துரைப்பதால் எவ்வித மாற்றமும்  நிகழப்போவதில்லை. நீதியை நிலைநாட்டுவதற்காக சிபிஐ தொடர்ந்து செயலாற்ற  வேண்டும்.

அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் சிறப்பாக  செயல்படுவது எவ்வாறு? அரசியல் இல்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ நன்றாக வேலையைச் செய்வது ஏன்? எந்தவொரு பொது நிறுவனத்தின் வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. பலர் உயர்மட்ட மற்றும் அரசியல் ரீதியான முக்கியமான வழக்குகளில் நீதித்துறை ஆய்வின் தரத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.



இத்தகைய சிக்கல்கள், முறையான சிக்கல்களை பிரதிபலிக்கின்றன. டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபனச் சட்டம் 1946ன் பிரிவு 4ன் படி ஏஜென்சியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க நிறுவனத்திற்குள் போதுமான பலம் உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சிபிஐயின் முக்கியமான அம்சங்களை, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய தணிக்கையாளர், ஆடிட்டர் ஜெனரலுக்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு இணையாக சிபிஐக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். சிபிஐயின் சட்ட ஆணையை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினர்.

விழாவில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை