தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவக் காற்று கடந்த 10 நாட்களாக வீசுவதன் காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பெய்து, கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் முக்கிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

மேலும், தென் மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று பலமாக வீசுவதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மேலெழும்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் மழை பெய்கிறது.

இந்நிலையில், கோவை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தென் மேற்கு திசையில் இருந்து வீசும் பருக்காற்றுதான் இதற்கு காரணமாக உள்ளது. தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியும் நீடிக்கிறது.

இதனால் ஈரப்பதம் உள்ள காற்று தொடர்ச்சியாக வீசியபடி இருக்கிறது. இதனால் கேரளாவுடன் சேர்த்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும்.

இது நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால், தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, அசோக்பில்லர், மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக நீடித்து வரும் காற்று சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவு நேரங்களில் மழைபொய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை